25 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சாரதி மரணம்

முல்லைத்தீவு, மல்லாவியைச் சேர்ந்த சாரதியொருவர் சமயோசிதமாகச் செயற்பட்டதால் சுற்றுலாச் சென்ற மாணவர்கள் 25 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவது,

மல்லாவியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அரச சார்பற்ற பொது அமைப்பு ஒன்றினால் இசைக்கருவிகளை மீட்டும் பயிற்சி நடைபெறுகிறது. இம்மாணவர்களில் 25 பேர் கொண்ட அணியொன்று, கடந்த 24 ஆம் திகதி மல்லாவி தனியார் பஸ் ஒன்றில் தென்பகுதிக்குச் சுற்றுலா செல்வதற்கு இசைப்பயிற்சி வழங்கும் குறித்த அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு சென்ற மாணவர்கள், இரு நாள் களப்பயணத்தை முடித்த பின்பு வெள்ளிக்கிழமை குருணாகலிலிருந்து கண்டியை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த வேளை சாரதிக்கு திடீரென மாரடைப்புக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. துரிதமாக செயற்பட்ட சாரதி, பஸ்ஸை நிறுத்தி விட்டு தன்னால் தொடர்ந்து பஸ்ஸை செலுத்த முடியாதிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதனை அடுத்து மாணவர்களால் சாரதி குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சாரதியின் சமயோசித முடிவினால் மலைப்பாதை ஊடாகப் பயணிக்க இருந்த மாணவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மாறாக சாரதி தொடர்ந்தும் பயணித்து இருப்பாராயின் பஸ் விபத்துக்குள்ளாகியிருக்கும்.
இச்சம்பவத்தில் தன்னுயிரைக் கொடுத்து தமது உயிரைக் காத்த சாரதியின் செயலை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்த மாணவர்கள், இடைநடுவில் தமது பயணத்தை நிறுத்தி விட்டு சாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மல்லாவி திரும்பியுள்ளனர்.

இச்சம்பவத்தில் மல்லாவி அணிஞ்சியன்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை பிரான்சிஸ் (வயது 43) என்ற சாரதியே மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்.

Related Posts