யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதன்கிழமை(20) ஹர்த்தாலின் போது குழப்பங்களை விளைவித்த 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை வியாழக்கிழமை (21) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.
யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
நீதிமன்ற கட்டடத்துக்கு கல்வீசி கண்ணாடிகளை உடைத்தமை, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களை உடைத்தமை, பொலிஸாரை தாக்கி காயப்படுத்தியமை, பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள், சமாதானத்துக்கு பங்கம் விளைவித்தவர்கள், கலகத்தில் ஈடுபட்டவர்கள் என 129 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் புங்குடுதீவு பகுதியில் குழப்பத்தில் ஈடுபட்டவர்களே யாழ்ப்பாணத்திலும் குழப்பங்களை விளைவித்தமை தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் குழப்பங்களில் ஏற்பட்ட மேலதிக நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.
குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்ற 60 மோட்டார் சைக்கிள்கள், 5 முச்சக்கரவண்டிகள், 42 துவிச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.