ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபருக்கு பிணை மறுப்பு

judgement_court_pinaiஹெரோயின் விற்பனை செய்த மற்றும் உடைமையில் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் பிணை மனுவினை யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

யாழ். கந்தப்ப சேகரம் வீதியைச் சேர்ந்த பாலசிங்கம் புஸ்பகுமார் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியன்று முனியப்பர் வீதியில் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்ய முயன்ற வேளை, யாழ். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்ட வேளையில், 130 மில்லி கிராம் ஹெரோயினை உடைமையில் மறைத்து வைத்திருந்துள்ளார்.

குறித்த நபரை யாழ். பொலிஸார் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 138 ஆம் திகதியன்று இவ்விரு குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையில், இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 18 மாதங்களாக விளக்கமறியலில் உள்ள இந்நபர் சார்பாக யாழ். மேல் நீதிமன்றில் பிணை மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கினை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வேளையில், பிணை மனுதாரர் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி நஞ்சு, அபின், மற்றும் அபாயகர ஒளதடங்கள் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு கோரியிருந்தார்.

சூழ்நிலை, சந்தர்ப்பங்களை குறிப்பிட்டு பிணை வழங்க முடியாதென்று பிணை மனுவினை யாழ். மேல் நீதிமன்ற பதில் ஆணையாளர் எஸ். பரமராஜா நிராகரித்தார்.