போராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (29.04.2014) விவசாய அமைச்சு அலுவலகத்தில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றுவதெற்கென 16 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் உரையாற்றுகையில்,
மாகாணசபை அமைக்கப்பட்ட நாள் தொடக்கம் எங்களைச் சந்திக்க வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்வாய்ப்புக் கேட்டே வருகின்றனர். அந்த அளவுக்கு வேலையில்லாப் பிரச்சினை இன்று பெரும் பிரச்சினையாக உள்ளது. இவர்களிலும் முன்னால் போராளிகள் அதிகம் சிரமப்படுகின்றனர்.
முன்னாள் போராளிகளில் பெரும்பாலானவர்கள் கல்வியை இடைநிறுத்திக் கொண்டவர்கள். இவர்களிடம் கல்விச் சான்றிதழ்கள் இல்லாததால் இன்று அரச சேவைகளில் அவர்களால் தொழில்வாய்ப்பைப் பெறமுடியாமல் உள்ளது. போராளிகளாகப் போகாமல் இருந்திருந்தால் இவர்களும் ஏனையவர்களைப் போல உயர்கல்வியை முடித்து இன்று பொறியியலாளர்களாகவோ, மருத்துவர்களாகவோ, ஆசிரியர்களாக கூட வந்திருப்பார்கள். ஆனால், எங்களின் விடுதலைக்காக என்று புறப்பட்டுத் தங்கள் கல்வியைத் தியாகம் செய்தவர்களை இன்று பயத்தின் காரணமாக எமது சமூகமே அரவணைக்கத் தயங்குகிறது.
முறைசார் கல்வித் தகைமையைப் பெறாவிட்டாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் போராளிகளாக இருந்த காலத்தில் பல்வேறு தொழில் துறைகளில் பயிற்சி பெற்றவர்களாகவே உள்ளார்கள். எனவே, தனியார் துறையினராவது நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்குத் தொழில்வாய்ப்பில் முன்னுரிமை வழங்க முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில்,
கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறுவருக்கும், கால்நடைப் பண்ணைப் பணியாளர்கள் நால்வருக்கும், நீர்ப்பாசனத் திணைக்களப் பராமரிப்புப் பணியாளர்கள் அறுவருக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தின், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் சோ.சிவபாதம், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.ஆர்னல்ட் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கினார்கள்.