வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் யார்? உறுதிப்படுத்தியது அரச சேவைகள் ஆணைக்குழு

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி வேணுகா சண்முகரத்தினம், அதிபர் தராதரத்திலிருந்து அரச சேவையைத் தொடர்ந்து செய்வதற்கு அனுமதி வழங்குவதாகவும், அதற்கு இடையூறாகச் செயற்படின், ஆணைக்குழுவின் கட்டளைகளை நிறைவேற்றத் தவறியமைக்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுக் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி றாஜினி முத்துக்குமாரனுக்கு அரசசேவைகள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

அமைச்சர் மற்றும் சில ஆசிரியர்கள் தனது பணிகளைத் தொடரவிடாமல் இடையூறு விளைவிப்பது குறித்து கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து முறைப்பாடு செய்வதற்காகப் புதிய அதிபர் வேணுகா சண்முகரத்தினம் நேற்றுமுன்தினம் கொழும்பு சென்றுவிட்டார்.

பதில் அதிபராக உள்ள றாஜினி முத்துக்குமாரன் தானே கல்லூரி அதிபர் என்று தெரிவித்துச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகக் கல்லூரிப் பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதனை ஆதரித்து டக்ளஸும் தொடர்ச்சியாக இந்த விடயத்தில் தலையிட்டு வருகிறார்.இந்த நிலையிலேயே இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 02.07.2012 ஆம் திகதியிடப்பட்ட இந்தக் கடிதத்தை அரசசேவை ஆணைக்குழுவின் செயலாளர் ரி.எம்.எல்.சி.சேனாரத்ன வேம்படி மகளிர் கல்லூரியின் பதில் அதிபர் றாஜினி முத்துக்குமாரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தகவலுக்காக அதன் பிரதி ஒன்று புதிய அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதில் இலங்கை அதிபர் சேவை தரம் i ஐச் சேர்ந்த வேணுகா சண்முகரத்தினம் அதிபர் தராதரத்தில் அரச சேவையைத் தொடர்ந்து செய்வதற்கான விதத்தில் அனுமதி வழங்குவதாகவும் அதற்கு இடையூறாகச் செயற்படின் அரசசேவை ஆணைக்குழுவின் கட்டளைகளை நிறைவேற்றத் தவறியமைக்காக உமக்கு எதிராக (பதில் அதிபர்) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை ஆணைக்குழுவின் உத்தரவுப்படி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஆணைக்குழுச் செயலாளர் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் மூலம் வேம்படியின் அதிபர் வேணுகா சண்முகரத்தினம்தான் என்பதை அரச சேவைகள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.