வேட்பாளர் மீதான தாக்குதல்; இரு தரப்பும் நீதிமன்றுக்கு; யாழ். பொலிஸார்

jaffna_20813_5யாழ். நகரில் கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி முறைப்பாடு செய்துள்ளனர்.

எனவே இருதரப்பினரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளோம் என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பத்திநாயக்க தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ். நகரில் வேட்பாளர் மீதான தாக்குதல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், தாக்குதலுக்குள்ளான தம்பிராசா, இராமநாதன் என்பவர் மீது குற்றஞ்சாட்டி முறைப்பாடு செய்துள்ளார். ஒருவர் கண்ணாடியை உடைத்தபின் மற்றொருவர் துப்பாக்கியை எடுத்துக் காட்டினார் என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் யார் என்று வேட்பாளர் எம்மிடம் சொல்லவில்லை.

அதேவேளை தனக்கு மரண பயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறித் தம்பிராசாவுக்கு எதிராக இராமநாதன் தனது உதவியாளர் மூலமாக முறைப்பாடு செய்துள்ளார் என்றார்.

சம்பவ இடத்தில் துப்பாக்கியைக் காட்டியவர் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் துரத்திச் சென்றமை தொடர்பில் கேட்டபோது, பொலிஸாரால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை என்று அவர் கூறியதோடு இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளோம் என்றும் தெரிவித்தார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்.