வெளிநாட்டு பெண்ணுடன் சேட்டை – வழங்கப்பட்ட தண்டனை!

காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப் பணம் விதித்ததுடன், ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ். காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த கடற்கரை பகுதிக்கு கடந்த 24 ஆம் திகதி சென்றுள்ளனர்.

அதன் போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அவர்களை தகாத வார்த்தையால் பேசி, குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்தாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 13 இளைஞர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, 4 இளைஞர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாறினர்.

ஏனைய 9 இளைஞர்களுக்கும் எதிராக தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 9 இளைஞர்களையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டது.

வழக்கின் 7ஆவது குற்றவாளிக்கு, 2 வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருட காலத்திற்கு ஒத்திவைத்த நீதவான், மூன்று குற்றங்களுக்கு தலா 1,500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.

தண்டப்பணம் கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத் தண்டனையும், நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 1 வருட சாதரண சிறைத் தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2 ஆம் குற்றவாளிக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதவான், 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், இரண்டு குற்றங்களுக்கு தலா 1,500 ரூபாய் அரச செலவாக செலுத்தும் மாறும் நஷ்ட ஈட்டினை கட்டத்தவறினால் ஒரு வருட சிறைத் தண்டனையும், அரச செலவு பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2 ஆம் மற்றும் 7 ஆம் குற்றவாளிகள் தவிர்ந்த ஏனைய ஏழு குற்றவாளிகளுக்கும், 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதவான், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1,500 ரூபாயாக 7 பேருக்கும் தண்டம் விதித்துடன் , 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப் பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத் தண்டனையும், நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 6 மாத கால சிறைத் தண்டனையும் விதித்தார்.