வெளிநாடுகளில் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையான இணையம் எம்மவரின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாகவுள்ளது – முதலமைச்சர்

vickneswaran-vicky-Cmவெளிநாட்டிலிருந்து வரும் திடீர் பணப்புழக்கம், எமது மக்களிடையே இருந்து வந்த கடின உழைப்பு முறை, சிக்கன முறை, பண்பாட்டு முறைகளையெல்லாம் ஆட்டம் காண வைத்துள்ளது என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வரணி மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் வைர விழாவும் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.

இந் நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில்,

அண்மைக்கால அரசியல் பிரச்சினைகள் எமது மக்களிடையே ஒரு புதிய கலாசாரத்தையே புகுத்தியுள்ளது. எம் மக்கள் பெருவாரியாகப் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். ஆனால் அவர்களின் உறவினர்கள் பலர் இங்கு தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.

தங்கியிருந்த அவர்களுக்கு வெளிநாட்டுப்பணம் படிப்படியாக வரத் தொடங்கியது. நான் இங்கு மாவட்ட நீதிபதியாக 1980 – 1981 முடிவு வரையில் இருந்த போதே இந்தப் புதிய கலாசாரம் நடைமுறைக்கு வந்தது இந்தத் திடீர் புதிய பணப்புழக்கம், எமது மக்களிடையே இருந்து வந்த கடின உழைப்பு முறை, சிக்கன முறை, பண்பாட்டு முறைகளையெல்லாம் ஆட்டம் காண வைத்தது.

இது காலக்கிரமத்தில் கல்வியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. முன்னர் எல்லாம் படித்தால்த்தான் முன்னேற முடியும், படித்தால்த்தான் அரசாங்க உத்தியோகம் பெற முடியும், படித்தால்த்தான் உயர் தொழில் பார்க்கலாம் என்றெல்லாம் இருந்தது. அதனால் எம் மாணவ மாணவியர் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற ஒரு வித உத்வேகத்துடன், அவாவுடன், வெறியுடன் படித்தார்கள். ஆனால் இன்று வெளிநாட்டில் இருந்து வந்த அந்நியச் செலாவணி அதையெல்லாம் மழுங்கடைய வைத்தது.

இங்குள்ளவர்களுக்குக் கல்வியில் சிறக்க வேண்டும் என்ற எண்ணம் போய் எப்படியாவது வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கத் தொடங்கியது. படித்துப் பணம் உழைக்க வேண்டும், படித்துப் பல்தொழில்களிலும் ஈடுபட வேண்டும், அரசாங்க உத்தியோகங்கள் எமக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் மலையேறத் தொடங்கிவிட்டன. அதுமட்டுமல்ல. வாழ்க்கைத்தரம் மாற்றமடைந்தது.

எல்லோர் கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் புழக்கத்திற்கு வந்தன. ஊதாரிச் செலவுகளுக்காகத் தவணை அடிப்படையில் குளிர்ப்பெட்டிகள், தையல் மெஷின்கள் போன்ற பலதையும் வாங்கத் தலைப்பட்டனர். பணம் வருவது சற்றுத் தளர்ந்தால் தவணைப் பணம் கட்ட முடியாமல் போய்ப் பல பாதிப்புக்களுக்கு உள்ளானார்கள் எம்மவர்கள்.

இவையெல்லாம் கல்வி வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெளிநாடுகளில் எந்தளவுக்குத் தொலைக்காட்சி, கணனி என்பன அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததோ அந்த அளவுக்கு அவை எம்மவரின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தன.

எமது பாரம்பரிய விழுமியங்கள் பல காற்றில் விடப்பட்டு வருகின்றன. களியாட்டங்களில் மனம் போவதால் மாணவர் மத்தியில் புகைத்தல், மது அருந்துதல், போதைப் பொருள் பாவித்தல், பெண்களை வருத்துஞ் சேஷ்டைகளில் ஈடுபடுதல், கோஷ்டிகளில் சென்று சண்டைகளில் ஈடுபடல் போன்றவை உள்ளடக்கப்பட்டு எமது பாரம்பரியம் பிறழ்ந்து போவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

வறுமை எம்மிடம் இருந்தபோது, இயலாமை எம்மை வாட்டியபோது எமது பாரம்பரியமானது அதை எல்லாம் எதிர்த்து முன்னேறி கல்வி, பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட வைத்தது. இன்று சகலதும் எமக்குக் கிடைத்தவுடன் எதற்குப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எம் இளைஞர்கள் யுவதிகள் மனதில் படிந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

உங்கள் பாரம்பரியம் நிலைக்க வேண்டுமானால் உங்கள் தனித்துவம் பேணப்பட வேண்டுமானால் நீங்கள் ஒவ்வொருவரும் எவருக்கும் நீங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகறியச் செய்ய வேண்டும். பலவிதமான தடைகளையும், சூழலால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களையுந் தாண்டி முன்னேற மாணவ மாணவியராகிய நீங்கள் முன்வர வேண்டும்.

நாளை உங்களுக்கே உரியது. இன்று நீங்கள் வாழும் வாழ்க்கைதான் உங்கள் நாளைய வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகின்றது என்று தெரிவித்தார்.