வெளிச்ச வீடு திறந்து வைப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் இலங்கை இராணுவத்தின் 55ஆவது படைப்பிரிவினரால் 2 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வெளிச்சவீடு மக்களின் பாவனைக்காக புதன்கிழமை (22) இரவு 7 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

கட்டைக்காட்டு சென்.மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கை இராணுவத்தின் 55ஆவது படைப்பிரிவினரால் இந்த வெளிச்சவீடு அமைக்கப்பட்டது.

இந்த வெளிச்ச வீட்டை, 55ஆவது படைப்பிரிவின் அதிகாரி பிரிகேடியர் மு.திருநாக்கரசு திறந்து வைத்தார்.

இந்த வெளிச்சவீடு அமைக்கப்பட்டதன் மூலம் வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கும் போது காலநிலை மாற்றத்தின் போதான ஆபத்துக்களிலிருந்து தப்பித்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு சமாச செயலாளர் எ.பெ.அன்ரனி கட்டைக்காட்டு கிராமிய அபிவிருத்தி சங்க தலைவர் யா.நிமலன் விமலதாஸ், இராணுவத்தினர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்