Ad Widget

வெடிபொருள் குறித்து தகவல் வழங்காதவர் யாழில் கைது!

ஆபத்தான வெடிபொருள் குறித்து தகவல் வழங்கவில்லை எனக்கூறி கூலித் தொழிலாளி ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், வெற்றிலை கேணி பகுதியில் நீண்ட காலமாக ஆட்களற்று இருந்த வீடொன்றின் காணியினை ஒருவர் துப்பரவு செய்துள்ளார்.

இது குறித்து, இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் வீட்டினை சோதனையிட்டனர். இதன்போது வீட்டினுள் சந்தேகத்திற்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை.

பின்னர் காணியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குண்டு போன்றதொரு மர்மப் பொருள் ஒன்றினை வேலி ஓரம் கண்டு பிடித்துள்ளனர். அது குறித்து அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்டு இருந்த பழனி என்பவரிடம் இராணுவத்தினர் விசாரணை செய்தனர்.

இதன்போது, காணியினை துப்பரவு செய்யும் போது குறித்த பொருள் காணப்பட்டதாகவும், அதனை தூக்கி வேலி ஓரமாக வீசி விட்டு தொடர்ந்து துப்பரவு பணியில் ஈடுபடுவதாகவும், வீட்டு உரிமையாளரின் மகனே தன்னை துப்பரவு பணிக்கு அமர்த்தியதாகவும் குறித்த தொழிலாளி கூறியுள்ளார்.

இதையடுத்து வெடிபொருள் குறித்து தகவல் வழங்கத் தவறிய குற்றச்சாட்டில் அவரைக் கைதுசெய்த இராணுவத்தினர், பளை பொலிசாரிடம் ஒப்படைத்தனர். பளை பொலிஸார் குறித்த நபரை தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், வீட்டு உரிமையாளரின் மகனை அழைத்து வாக்கு மூலமும் பெற்றுள்ளனர்.

Related Posts