வீடமைப்பு அதிகார சபையால் யாழில் 60.65 மில்லியனில் வீடுகள்

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 4 விதமான கடன்திட்டத்தில் 290 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட முகாமையாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2014 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட 4 வகையான கடன்திட்டங்களின் ஊடாக 290 வீடுகள் அமைக்கப்பட்டது.

அதற்கமைய பரந்த அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ் 67 வீடுகள் 8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல வருமானம் குறைந்த நலிவுற்ற குடும்பங்களுக்கான திட்டத்தின் கீழ் 100 வீடுகள் 9.7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கான திட்டத்தில் 118 வீடுகள் 42.45 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மானிய அடிப்படையிலான திட்டத்தில் 5 வீடுகள் 0.5 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த 4 திட்டத்தின் ஊடாகவும் நெடுந்தீவில் 10 வீடுகளும், வேலணையில் 01 வீடும், ஊர்காவற்றுறையில் 03 வீடுகளும், யாழ்ப்பாணத்தில் 13வீடுகளும், நல்லூரில் 10 வீடுகளும், சண்டிலிப்பாயில் 23 வீடுகளும், சங்கானையில் 12 வீடுகளும், உடுவிலில் 21 வீடுகளும் தெல்லிப்பழையில் 26 வீடுகளும் அமைக்கப்பட்டன.

அதேபோல கோப்பாயில் 28 வீடுகளும், சாவகச்சேரியில் 62 வீடுகளும், கரவெட்டியில் 42 வீடுகளும் , பருத்தித்துறையில் 18 வீடுகளும், மருதங்கேணியில் 8 வீடுகளும் மற்றும் காரைநகரில் 13 வீடுகளான 290 வீடுகளும் 60.65 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts