விஷ்வரூபம் எடுத்துள்ள விஷ ஊசி விவகாரம் : ஐ.நாவுக்கு அவசர கடிதம்

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது விஷ ஊசி ஏற்றப்பட்டதாக பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக சர்வதேச பொறிமுறையின் கீழ் ஐ.நா விசாரணை நடத்தவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க முன்வர வேண்டுமெனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமரன் அவசர கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ – மூன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், கடத்தப்பட்டோர் விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், உடல்நல விகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் மற்றும் உண்மைக்கும் நீதிக்குமான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஆகியோருக்கே உருத்திரகுமரன் மேற்படி கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தடுப்புக்காவலில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே மரணமடையும் வகையில் திட்டமிடப்பட்டு மர்மமான ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டிருக்குமாயின், அது மனிதத் தன்மை அற்றச் செயலென அவர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமானதும் நம்பிக்கைக்குரியதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கையின் நீதித்துறை இன்னும் தயாராக இல்லையென ஐ.நா ஏற்கனவே தெரிவித்திருந்ததை குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள உருத்திரகுமரன், விஷ ஊசி விடயத்தில் நம்பிக்கைக்குரிய வகையில் விசாரணை நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில், ஐ.நா இவ்விடயத்தில் உடன் தலையிட்டு விசாணை நடத்த வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டுமெனவும் உருத்திரகுமரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor