வடக்கு மாகாணத்தின் நீர் வளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான இரண்டு நாள் ஆய்வரங்கு ஒன்றை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு எதிர்வரும் செப்ரெம்பர் முதல் வாரத்தில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக்குறிப்பில்,
வடக்கு மாகாணத்தின் எல்லைக்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நன்னீரின் பயன்பாடு அதிகரித்துச் செல்லும் அதேசமயம் நன்னீருக்கான பற்றாக்குறையும் அதிகரித்துச் செல்கிறது.
மேலும், சூழல் விரோதச் செயற்பாடுகளினால் இருக்கின்ற நீரிலும் மாசுக்கள் கலந்து வருகின்றன. பூமி வெப்பமடைவதால் ஏற்படும் காலநிலை மாற்றங்களினால் வருங்காலங்களில் அதிக வரட்சியை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எமது மக்களின் உயிர் ஆதாரமும் விவசாயப் பொருளாதாரத்தின் மூலாதாரமுமான நன்னீர் வளத்தைக் காப்புச் செய்து அதனை நிலைபேறான அபிவிருத்தி அடையச் செய்யவேண்டிய பாரிய பொறுப்பு வடக்கு மாகாணசபையினராகிய எங்களுக்கு உண்டு.
அதற்கு ஏற்ற கொள்கைகளை வகுத்துத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முன்னோடியாக எதிர்வரும் செப்ரெம்பர் முதல் வாரத்தில் வடமாகாண நீர்வள அபிவிருத்தி தொடர்பான இரண்டு நாள் ஆய்வரங்கு ஒன்றை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் நீரியலுடன் தொடர்புடைய நிபுணர்களை இந்த ஆய்வரங்கில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
கலந்து கொள்ள விரும்பும் ஆய்வறிஞர்கள் எதிர்வரும் ஜுன் 05 ஆம் திகதிக்கு முன்பாக விவசாய அமைச்சு, இல 295 கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது npagrimini@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கோ தங்கள் பெயர் விபரங்களையும் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக்கட்டுரையின் உத்தேச தலைப்பையும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
வடக்கின் இருப்பு நன்னீர் வளத்தின் கையிருப்பிலேயே தங்கியிருப்பதால் இம் முயற்சியில் ஆய்வாளர்கள் அனைவரையும் தவறாது பங்கேற்குமாறு கோருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.