விவசாயிகளின் ஊக்குவிப்புக் கடன்: முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்’

daklasவடமாகாண விவசாயிகளுக்கு விசேட விவசாய ஊக்குவிப்பு கடன் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவருமாறு விவசாய மற்றும் கமநல திணைக்கள அதிகாரிகளுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (19) காலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின் மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் கமல், மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் மின்சாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், துறைகள் சார்ந்த அதிகாரிகளுடன் அந்தந்த துறைகளின் முன்னேற்றங்கள் தொடர்பான மீளாய்வுகளும் நடைபெற்றன.

இக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்,

‘வடமாகாணத்தில் தரம் – 1 மாணவர்களுக்கான அனுமதியின் போது நன்கொடை கேட்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறு நன்கொடை கேட்கும் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் தேசிய பாடசாலைகளும் தாங்கள் வசூலிக்கும் பாடசாலை அபிவிருத்திக் கட்டணம், வசதிக் கட்டணம் உள்ளிட்டவை தொடர்பில் உரிய பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.

இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு