விளையாட்டுத்துறையில் தேசிய, சர்வதேச மட்டங்களில் எமது இளைஞர்கள் பிரகாசிக்கும் வாய்ப்புக் குறைவு – முதலமைச்சர்

vicknewaran-tnaயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எங்களது இளைஞர் சமுதாயம் விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்தி திறமையாகவுள்ளபோதிலும், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பிரகாசிக்கும் வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது. இனிவரும் காலத்தில் இவ்வாறான நிலை நீடிக்கலாகாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா தலைமையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வடமாகாண மாணவர்களுக்கான 4ஆவது வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு யாழ். கல்வியல் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மத்திய அரசாங்கம் தன்னாலான உதவிகளைச் செய்வதற்கு முன்வந்திருக்கும் நிலையில், எமது மாணவச் சமுதாயம் முன்னேற அவர்கள் வழிவகைகளை தேடிக்கொள்ள வேண்டும். இன்றைய உலகில் விளையாட்டுத்துறையில் முன்னேற வேண்டுமானால் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு போதியளவு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

எமது தமிழ் பேசும் இளம் சமுதாயத்தினரை விளையாட்டுத்துறையில் சிறப்பான நிலைக்கு கொண்டுவருவதற்கு எம்மால் முடியுமானவற்றை செய்துதருவதற்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இங்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உரையாற்றுகையில்,

‘ஒருபுறம் எமது வரலாறுகள் இடித்து அழிக்கப்படுகின்றன. மறுபுறம் எமது வீரர்களுக்கு பதக்கம் சூட்டி வாழ்த்துகின்றோம். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி 23 வருடங்களுக்கு முன்னர் 1,100 மாணவர்களைக் கொண்டதாகவும் வளமான கட்டிடங்களைக் கொண்டதாகவும் கல்வி நிலையிலும் ஏனைய செயற்பாடுகளிலும் மிகவும் சிறப்பான நிலையில் காணப்பட்டது. தற்போது நடேஸ்வராக் கல்லூரியும் அதனோடு சூழவுள்ள 3 ஆலயங்களும் இடித்து அழிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு