வினாத்தாள்களில் புதிய மாற்றங்கள் கொண்டுவர கல்வியமைச்சு தீர்மானம்!!

புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரிப்பில் சில மாற்றங்களை கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட தடங்கல்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கு பொறுப்பான மேலதிக செயலர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

“தேசிய கல்வி நிறுவகம் இது தொடர்பான சுற்றறிக்கையை மிக விரைவில் வெளியிடும். புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாக கொண்டு அது வெளியிடப்படும்.

வினா தாளைத் தயாரிக்கும்போது பாடத்திட்டத்தின் எந்தெந்தப் பாடங்கள் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பது சுற்றறிக்கையின் மூலம் குறிப்பிடப்படும்.

சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பிலும் இவ்வாறான ஒரு முறைமை பின்பற்றப்படும். அது தொடர்பில் பேச்சுக்கள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் அது தொடர்பிலான முடிவுகளும் எட்டப்படும் என மேலதிக செயலர் தர்மசேன தெரிவித்தார்.

இதனிடையே, புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளை, பாடத்திட்டத்தின் முக்கியமான பிரிவுகளின் அடிப்படையில் மட்டும் நடத்த தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளதாக அந் நிறுவகம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் வரை இந்த பாடத்திட்டத்தின் பிரிவுகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் விளைவாக, கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor