வித்தியா படுகொலை வழக்கு; மேலும் ஒரு சாட்சியாளரை மன்றில் ஆஜர்படுத்த முடிவு

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தில் மேலும் முக்கிய சாட்சி ஒருவர் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பெருங்குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி நிசாந்த சில்வா மன்றிற்கு தெரிவித்தார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக அறிந்த மக்கள் தற்போது நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தகவல்களை தந்துதவுமாறு மன்று கேட்டுள்ளது.

மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரனை இன்று (29) புதன்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போதும் படுகொலை தொடர்பாக சேகரிக்கப்பட்ட மற்றும் கொலை நடந்த இடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தடயங்கள் தொடர்பான அறிக்கைகள், டீ.என்.ஏ தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை.

இதனையடுத்து இவ்வழக்கு விசாரணையை ஜுலை மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

இதன்போது, கொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சியம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளதாகவும் அவரிடம் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அடுத்த நீதிமன்ற விசாரணைகளின் போது குறித்த சாட்சியத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகவும் வழக்கு விசாரணைகளை துரிதமாக நடத்தி முடிப்பதற்கு கிராம மக்களின் உதவி தமக்கு தேவைப்படுவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் புங்குடுதீவு கிராமத்தில் வசித்த குடும்பங்களின் விபரம், சம்பவத்தின் பின்னர் குறித்த கிராமத்திலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் புதிதாக குடியேறியுள்ளவர்களின் விபரங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு நீதிபதி எம்.எம் றியால் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts