30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் ஒருவருக்கு கனடாவில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கப்பல் பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட ரவிசங்கர் கனகராஜா எனப்படும் சங்கிலி என்பவருக்கு கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது.
பாரியளவிலான ஆயுதங்கள் நிரப்பப்பட்ட மூன்று கப்பல்களை புலிகளுக்காக இலங்கைக்கு கொண்டு வந்ததாக ரவிசங்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா நீதிமன்றம் ரவி சங்கருக்கு 30 ஆண்டுகால சிறை தண்டனை விதித்திருந்தது. இன்டர்போல் பொலிஸார் சர்வதேச பிடிவிராந்து உத்தரவு ஒன்றையும் ரவிசங்கருக்கு எதிராக விதித்திருந்தனர்.
எனினும், இந்த விடயம் குறித்து கனேடிய பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த ரவிசங்கரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இலங்கை பொலிஸின் சர்வதேச பிரிவு கனேடிய அதிகாரிகளிடம் கோரியிருந்தது என சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.