தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதக் கொள்வனவிற்காக பல மில்லியன் கணக்கான டொலர்களை திரட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13பேர் மீது சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சுவிஸ், ஜேர்மனி, மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த இவர்கள் மீது குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்தமை அல்லது அதற்கு உதவியமை, மோசடி, போலி சான்றிதழ், பணச்சலவை, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நுண்கடன் திட்டத்தின்கீழ் சூரிச்சிலுள்ள வங்கியிலிருந்து இந்த நிதி திரட்டப்பட்டதாகவும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் இந்த நிதி திரட்டப்பட்டதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காவல்துறையினரால் நடாத்தப்பட்ட விசாரணையிலிருந்து, பெருந்தொகையான நிதி புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்டதாகவும், சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் 2009ஆம் ஆண்டிலிருந்து இந்த நிதி திரட்டல் பணி நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெலின்சோனாவில் உள்ள சமஷ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரம் தொடர்பான விசாரணைகள் எப்போது என்பது இன்னமும் தீர்மானிக்கப்பட வில்லை.
இதேவேளை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 13பேரின் பெயர் விபரமும் சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.