Ad Widget

விஜய தமிழ்ப்புத்தாண்டு சுபநேரங்கள் !

பிறக்கும் விஜய தமிழ்ப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 13ஆம் திகதி சனிக்கிழமை முன்னிரவு 11.58 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிக்கிழமை பின்னிரவு 1.29 க்கும் பிறக்கிறது.வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி அன்று இரவு 7.58 மணி முதல் அதிகாலை 3.58 வரை விஷ¤ புண்ணிய காலம் என்றும், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி அன்று இரவு 9.29 முதல் காலை 5.29 வரை விஷ¤ புண்ணிய காலமாகும்.

திருக்கணிதம், வாக்கியம் இரண்டிற்கும் புது வருஷப் பிறப்பில் கருத்து ஒற்றுமையின்மையால் மக்கள் குழப்பமடையாது தாங்கள் எந்தப் பஞ்சாங்க நடைமுறையை பின்பற்றுகிர்களோ அதன்படி நடந்து புதுவருடப் பிறப்பு சுப கருமங்கள் செவ்வனே செய்து, இறையருளைப் பெற்றுக்கொள்ளும்படி வேண்டுகின்றோம்.

மருத்து நீர்.

திருக்கணிதம், வாக்கியப் பஞ்சாங் கங்களில் கூறப்பட்டுள்ள விஷ¤ புண்ணிய காலங்களில் சகலரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்து நீரை பெரியவர்களைக் கொண்டு உள்ளன்போடு, வடக்கு, கிழக்கு புறம் பார்த்து நின்று தேய்த்து அவர்களின் ஆசியினைப் பெற்றுக்கொண்டு ஸ்நானம் செய்தல் வேண்டும்.

புத்தாடை அணிதல்:

மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்ததன் பின்பு நீலநிறப்பட்டாடை அல்லது நீலக்கரை அமைந்த வெள்ளை புது வஸ்திரம் அணிந்துகொள்ளுதல் நன்மை தரும்.

தரிசனம்:

நித்திய கருமங்களை முடித்து ஸ்நா னம் செய்து புது ஆடை அணிந்து கொண்டதன் பின் கண்ணாடி, தீபம், பூரண கும்பம், இஷ்டகுல தெய்வங்களின் திருவுருவப் படங்கள் என்பவைகளை மனதை ஒருநிலைப்படுத்தி தியானித்து வழிபடுவதுடன் தாய், தந்தை, குரு, பெரியவர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்வது மேன்மை தரும். அவர்களுடைய நல்லுரைகளைக் கேட்பதுடன், வருஷப் பலன்களையும் அறிந்துகொள்வது உயர்வினை அளிக்கும்.

தெய்வ வழிபாடு:

தமது வீடுகளில் இருக்கின்ற தெய்வ வழிபாடுகளுடன் நின்றுவிடாது தங்கள் ஊரில், நகரில் அமைந்துள்ள உள்ளத்துக்கு சாந்தியையும், அமைதியையும் அளித்திடும் ஆலயங்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதுடன் அங்கு வருகை தரும் ஏழை எளியவர்களுக்கு இயன்றவரை தான தருமம் செய்வதும், ஆலயங்களின் குறைகளையும் அறிந்து புது வருஷத்தில் அவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும் புதுவருஷ சுபகருமங்களாகக் கொள்ளப்படுகின்றது. இதனால் இறையருள் நிச்சயம் கிடைத்திடும்.

உணவு:

விஜய புதுவருஷத்தில் எள் அன்னம், வேப்பம்பூ, நெல்லிக்காய் துவையல் என்பவைகளுடன் சேர்த்து அறுசுவை பதார்த்தங்களையும் உற்றார், உறவினர், நண்பர்களுடன் சேர்ந்து உண்பது சிறப்புத் தரும்.

பெரியோர் தரிசனம்:

விஜய வருஷம் சித்திரை 02 ஆம் நாள் 15.04.2013 திங்கட்கிழமை காலை 9 மணி 18 நிமிடம் தொடங்கி 10 மணி வரையுள்ள சுபநேரத்தில் பெரியோர்களை சந்திப்பதும், கலந்துரையாடி மகிழ்வதும் மேன்மை தரும். அல்லது 04 ஆம் நாள் புதன்கிழமை காலை 6 மணி 07 நிமிடம் தொடங்கி 7 மணி 16 நிமிடம் வரையுள்ள சுபநேரம் சிறப்புத் தரும்.

கைவிசேடம்:

14.04.2013 ஞாயிறுக்கிழமை இரவு 10 மணி 26 நிமிடம் தொடங்கி 11 மணி 50 நிமிடம் வரையுள்ள சுபநேரம், அல்லது 15.04.2013 திங்கட்கிழமை காலை 6 மணி 02 நிமிடம் தொடங்கி 7 மணி 12 நிமிடம் வரையுள்ள சுபநேரத்தில் பெரியவர்களிடமிருந்து கை விஷேடம் பெற்றுக்கொள்வது உயர்வினைத் தரும்.

பொங்கல்:

விஜய வருஷம் சனிக்கிழமை பின் இரவு பிறப்பதால் அடுத்த நாளான சூரிய உதயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 05 மணி 40 நிமிடம் தொடங்கி 6 மணி 14 நிமிடத்துக்குள் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்வது மிகவும் நன்மை அளிக்கும்.

விருந்துண்ணல்:
விஜய புதுவருஷம் பிறந்து புதிய இடங்களுக்கு சென்று விருந்து உண்பதானால் 15.04.2013 திங்கட்கிழமை முற்பகல் 9 மணி 30 நிமிடத்தின் மேல் அல்லது 17.04.2013 புதன்கிழமை முற்பகல் 10 மணி 30 நிமிடத்தின் மேல் விருந்து உண்பது நன்மையளிக்கும்.

பூமி தரிசனம்:

புதிய பூமிகளில் விஜய வருஷத்தில் காலடி எடுத்து வைப்பவர்கள் 15.04.2013 திங்கட்கிழமை காலை 6 மணி 05 நிமிடம் தொடங்கி 7 மணி 12 நிமிடத்துக்குள் அல்லது 17.04.2013 புதன்கிழமை காலை 10 மணி 02 நிமிடம் தொடக்கம் 11 மணி 08 நிமிடம் வரையுள்ள காலங்களில் பூமிதரிசனம் செய்வது மிகவும் நன்மையைக் கொடுப்பதாக அமையும்.

Related Posts