விசாரணைக்காக சுமந்திரன் முன் முன்னிலையாகப்போகும் மகிந்தராஜபக்ஷ!

அரச கணக்குகளிலிருந்து மறைத்து வெளிநாடுகளிலிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் 3பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின்முன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு முன்னிலையாகவேண்டுமென சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘நாடு தற்போது 9.5 மில்லியன் கடன் சுமையை எதிர்நோக்கியுள்ளது. இதுகுறித்து ஆராய்வதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் மூவரடங்கிய குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. அவர்களது அறிக்கை வெளியான பின்னர் கடன் குறித்த சரியான தகவலை வெளிப்படுத்த முடியும்.

கடந்த அரசாங்கத்தைப்போன்று கடன்பெறுவதால் பிரச்சனை தீரப்போவதில்லை. நாட்டில் 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் வற்வரியில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும். அத்துடன் வருமானத்தை அதிகரிக்கும் திட்டமொன்றும் கொண்டுவரப்படவேண்டுமெனவும் எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திடமும் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்னைய ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராகவும் முன்னாள் ஆட்சியாளரே இருந்தார். அப்படியாயின் அவரது அனுமதி பெற்றா கடன் பெறப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் நிதிக் குழுவொன்று உள்ளது. முன்னாள் நிதியமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும். அதன் பின்னர் குறித்த அறிக்கையை எம்மிடம் கையளிக்கலாம்’ என்றார்.

Recommended For You

About the Author: Editor