வாள்வெட்டில் இருவருக்குக் காயம்!

கடந்த சில நாட்களாக இரண்டு கிராம இளைஞர்களுக்கு இடையே நிலவி வந்த பகமை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் வாள்வெட்டில் முடிந்தது.

இச்சம்பவம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றது.

இதில் இருவர் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தையல் கடையின் முன்பாக நின்று மத்தாளோடைப் பகுதியைச் சோந்த சில இளைஞர்கள் மதுபோதையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறான முறையில் நடந்துள்ளார்கள்.

இதனால் தையல் கடையின் உரிமையாளர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் இதனால் வாடிக்கையாளாகள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் இளைஞர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனை செவிமடுக்காத இளைஞர்கள் குறிப்பிட்ட தையல் கடை உரிமையாளருடன் முரண்பட்ட போக்கைத் தொடர்ந்து பேணி வந்துள்ள நிலையில் நேற்று மதியம் தையல் கடை உரிமையாளருக்கு மதிய உணவு கொண்டுவந்த பூலோகசிட்டி இளைஞர் ஒருவரை தாக்கியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து மாலையில் குறிப்பிட்ட இடத்திற்கு வருகைதந்த இளைஞர் குழுவொன்று அட்டகாசம் செய்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் வெட்டியும் உள்ளார்கள்.

இந்தச் சம்பவத்தில் மத்தாளோடை கிராமத்தை சேர்ந்த இராசலிங்கம் தனுஸ்கரன் (வயது 20) மற்றும் பூபாலசிங்கம் உமாரமணன் (வயது 26) ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Recommended For You

About the Author: Editor