வாதரவத்தையில் இளம் பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு

elumbukooduவாதரவத்தை சந்தியில் இராணுவ காவலரணை அண்மித்து கடற்கரைக்குச் செல்லும் ஒழுங்கையில் பற்றைக்குள் இருந்து இளம் பெண்ணின் எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் குறித்த பெண்ணின் ஆடைகள், அணிகலன்கள் சிதறிக் காணப்படுவதனை அடிப்படையாகக் கொண்டு அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மண்டை ஓடு, உடற்பாக எலும்புகள் அங்கு பரவிக் காணப்படுகின்றன.

வாதரவத்தைச் சந்தியிலிருந்து குறித்த ஒழுங்கையூடாகச் செல்லும்போது கோயில் ஒன்று காணப்படுகின்றது. அதிலிருந்து கடற்கரை நோக்கிச் சுமார் 200 மீற்றல் தூரத்தில் ஒழுங்கையை அண்மித்துள்ள பற்றையிலிருந்தே எலும்புக்கூடு நேற்று மீட்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் குறித்த பெண்ணின் உள்ளாடை, மேலங்கி, கைக்குட்டை என்பனவும் அவரது தோடு, தலைக்கிளிப், கறுப்புநிற பாதணி அவரது தலைமுடி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 30 தொடக்கம் 35 சென்ரிமீற்றர் நீளமுடையதாகத் தலைமுடி காணப்படுகின்றது.

அந்த ஆடைகள் அணிகலன்கள் பழுதடையவில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு, அவர் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரான காலப்பகுதியிலேயே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

அவரது செருப்பின் பின்புறம் செம்பாட்டு மண் ஒட்டிக் காணப்படுகின்றது. குறித்த பெண் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அங்குமீட்கப்பட்ட சான்றுப் பொருள்கள் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ன.

அவற்றைப் பார்வையிட்டு குறித்த பெண் யார் என்பது தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிப்பணிமனையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலைத் தரப்புக் கேட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.