வாக்குகளுக்காக இனவாதத்தை கக்குகின்றனர்: ஜெயப்பிரியன்

jeya-pireyanவடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அந்த மக்களின் பிரச்சினைகளை குறித்து ஆராயாமல் அரசியல் வாதிகள் இனவாதக் கருத்துகளையே கக்குகின்றனர் என்று, வடமாகாணசபையின் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் வீரராஜன் ஜெயப்பிரியன் தெரிவித்தார்.

சிங்கள அரசியல் வாதிகள் மட்டுமல்ல தமிழ் அரசியல் வாதிகளும் இனவாதக் கருத்துக்களை மாத்திரமே முன்வைத்து தமது வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொள்வதற்கு முனைகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாத கருத்துக்களை பரப்புவதன் மூலமாக எதிர் காலத்தில் கூட அவர்களின் பிரச்சினைகளும் தேவைகளும் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அக்கட்சி மக்களின் ஐக்கியத்துக்காகவே செயற்படுகின்றது.

தென்னிலங்கை மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டாலும் குரல் கொடுக்கின்றது. வடக்கு மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் முன்னின்று அதனைத் தட்டிக் கேட்கின்றது. இப்போதுள்ள சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுதான் பொருத்தமான ஒன்றாகும்.

இனங்களுக்கிடையிலான விரோதம் தான் இதுவரை காலமும் ஏற்பட்ட இழப்புக்கள் அனைத்துக்கும் பிரதான காரணமாக அமைந்தது என்பதனை எவரும் மறந்துவிடமுடியாது.

இன ஒற்றுமையுடன் செயற்பட்டால் இயன்றவரை பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் சிறந்ததாக அமைகின்றன. இதனை அனைத்து மக்களும் உணர்ந்துள்ளார்கள். எனவே, வடக்கு மக்களும் இதனை உணர்ந்து எமக்கு வாக்களிப்பார்கள். யுத்தத்தின் பிடியில் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த எமது மக்களின் பிரச்சினைகளை தேடியறிந்து அவற்றுக்கு தீர்வு காணவேண்டும் என்பதே முக்கியமானதாகும்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமென்று பல கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் துன்பங்களுக்கு முடிவென்பது இன்றும் தொடர்புள்ளியாகவே காணப்படுகின்றது. எனவே, மக்கள் மாற்றம் ஒன்றை விரும்பி நிற்கின்றார்கள் அதற்காக கட்சி பேதங்களைப் பார்க்காது என்னைப்போன்ற இளைஞர்களின் முயற்சிக்கு உறுதுணையாக நிற்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்