வாக்காளர் பதிவுப் பட்டியல் இணையத்தில் இணைக்கப்படும்

வாக்காளர் பதிவுப் பட்டியலில் தமது பெயர் உள்ளதா என்பதை இணையத்தின் மூலமாக பரீட்சிப்பதற்கு ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின் இலங்கை வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.இலங்கை வாக்காளர் பதிவுப்பட்டியல் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இறுதியாக பூர்த்தியாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பட்டியலை இணையத்தின் மூலம் பார்வையிட முடியும்.

தமது பெயர் வாக்காளர் பதிவுப் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையிலுள்ள, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இது மிக உதவிகரமான சேவையாக அமையும்.

2011 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவுப் பட்டியல் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தமது பெயர் இல்லாதவர்கள் அப்பட்டியலில் பெயர்களை இணைக்க விண்ணப்பிக்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். எவ்வாறெனினும், 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுக்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அவர் கூறினார்.