வாகன சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறை அடுத்த ஆண்டு முதல் அமுல்!

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸாருக்கு இது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சாரதிகளின் கவனயீன்மை காரணமாக இந்த வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது. அதாவது தற்போது நாளொன்று 8 பேர் வீதம் இறக்கின்றனர்.

இதனையடுத்து மேற்படி திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்படும்.

அதாவது 24 மாதத்திற்குள் சாரதி ஒருவர் 24 புள்ளிகளை பெறுவார் எனின் 12 மாத காலத்திற்குள்ள குறித்த சாரதியின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும்.

மீள வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு நன்னடத்தை காலம் வழங்கப்பட உள்ளதோடு இக்காலத்தில் 6 புள்ளிகள் பெற்றால் நன்னடத்தை காலம் மேலும் ஒரு வருடத்தினால் நீடிக்கப்படும்.

24 மாத காலத்தினுள் 24 புள்ளிகளைவிட குறைவாகப் பெறும் சாரதி ஒருவர் அடுத்த வருடத்தில் புள்ளி எதுவும் பெறாவிட்டால் அந்த புள்ளிகளில் 6 குறைக்கப்படும்.

அதற்கு அடுத்த வருடத்திலும் புள்ளிகள் எதுவும் பெறாவிடின் அவரின் சகல புள்ளிகளும் நீக்கப்படும்.

சாரதி பயிற்சி வகுப்பு நடத்தும் ஒருவர் 24 மாத காலத்தினுள் 12 புள்ளிகள் பெற்றால் அவரின் அனுமதி பத்திரம் 12 மாதங்களுக்கு ரத்துச் செய்யப்படும்.

சாரதிகள் பெறும் புள்ளிகள் பற்றிய விபரம் ஒவ்வொரு மாதமும் 10 திகதிக்கு முன்னர் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றமும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும்.

அவை கணனியில் உட்படுத்தப்பட்டு புள்ளிகள் கணிப்பிடப்படும்.

18 புள்ளிகளை தாண்டியதும் அது குறித்து கடிதம் மூலம் சாரதிக்கு அறிவிக்கப்படும்.

Recommended For You

About the Author: Editor