வவுனியாவில் முன்னாள் போராளியொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
வவுனியா கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.
கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு வவுனியா கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்திற்குள் புகுந்த சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரும், அவரது சகாக்களும் ஆயுதங்களைக் காட்டி தம்மை உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகத் தெரிவித்து 30 சிங்கள குடும்பங்கள் ஏ 9 வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற வவுனியா பொலிசார் கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்ட சிங்கள குடும்பங்களுக்க பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியிருந்ததுடன், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைதுசெய்வதாகவும் உறுதியளித்திருந்தனர்.
இதற்கமையவே இன்று சின்னவன் என்ற முன்னாள் போராளியும், அவரது நண்பர் ஒருவரும் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொக்குவெளி என்ற தமிழ் கிராமத்தில் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான காணியை கையகப்படுத்தி இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட படையினருக்கான குடியிருப்புத் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவான் விஜேவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் குடியிருப்புக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் ஒரு தொகுதி தமிழ் பெண்களை திருமணம் செய்த படைச் சிப்பாய்களுக்க வழங்கப்பட்ட நிலையில், ஏனையவற்றில் 30 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இந்த நிலையிலேயே கடந்த 27 ஆம் திகதி சின்னவன் என்ற முன்னாள் போராளியும் அவரது நண்பர்களும் குடிபோதையில் வந்து ஆயுதங்களுடன் தங்களை அச்சுறுத்தியதாக சிங்கள குடும்பங்கள் முறையிட்டிருந்தனர்.
அதுவும் பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் மறுநாளான 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும், உட்பட எழுக தமிழ் பேரணிக்கும் எதிர்ப்புத்தெரிவித்து கண்டனப் பேரணியொன்றை நடத்திய நிலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியிருந்தது.
பொதுபல சேனா அமைப்பின் பேரணியின் போது கொக்கெலிய என பெயர் மாற்றப்பட்டுள்ள கொக்குவெளி படையினர் குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து முக்கியமாக குரல் எழுப்பப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.