வவுனியாவில் பசியால் பெண் மரணம்

வவுனியா, ஈஸ்வரிபுரம் பகுதியில் வறுமை காரணமாக சாப்பிட உணவின்றி பெண் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறித்த பெண்ணின் மருமகன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் பேரப் பிள்ளைகளைகளுடன் இவர் கடந்த சில நாட்களாக தங்கியுள்ளார்.

அத்துடன் குடும்ப வறுமை, மற்றும் வரட்சி, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் கடந்த மூன்று நாட்களாக வீட்டிலிருந்த உணவு வகைகளை பேரப்பிள்ளைகளுக்கு வழங்கியதுடன், தான் உணவு உட்கொள்வதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பசி தாங்க முடியாது நேற்றைய தினம் அயல் வீட்டிற்குச் சென்று உணவு கேட்ட போது அவர்கள் கொஞ்சம் பொறுங்கள் இப்போது தான் சமைக்கிறோம்.” – எனக் கூறியுள்ளனர்.

அப்போது அவர்களிடம் தண்ணீர் வேண்டி அருந்திய அந்தப் பெண் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். 60 வயதுடைய இராசையா லக்ஷ்மி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று மதியம் வரை சடலம் பக்கத்து வீட்டிலேயே விசாரணைக்காக விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.