வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக இதுவரை எனக்கு எதுவித அறிவித்தலும் கிடைக்கவில்லை – அரச அதிபர்

வலி. வடக்கில் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக தனக்கு எந்த வித அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

sutharam-arumainayakam

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் அரச அதிபரை ஊடகவியலாளர்கள் சந்தித்து வலி. வடக்கு பிரச்சனை தொடர்பாக எதுவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வலி. வடக்கில் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக இதுவரை எனக்கு எந்தவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்க பெறவில்லை.

வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக ஊடகங்கள் மூலமே அறிந்து கொண்டேன். அது தொடர்பாக பிரதேச செயலர் கூட இதுவரை எனக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை.

அதேவேளை இந்த பிரச்சனை தொடர்பாக உயர் மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அறிந்து கொண்டேன் என தெரிவித்தார்.

நாவற்குழி பிரதேசத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் காணிகள் வழங்கப்படுவது தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டதா? என கேட்ட போது,

நாவற்குழி பிரதேசத்தில் காணிகள் பங்கிட்டு வழங்கப்படுவது தொடர்பாக வீடமைப்பு அதிகார சபையினரால் இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை.

இந்த காணிகள் ஏற்கனவே வீடமைப்பு திட்டத்திற்காகவே வீடமைப்பு அதிகார சபையிடம் வழங்கப்பட்டு இருந்தது.

ஆனலும் தற்போது அந்த திட்டத்திற்காக காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் போது அது தொடர்பாக அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் எனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.