போர் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் சொந்த இடங்களில் காலாதிகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் போர் காரணமாக உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் தமது சொத்துக்கள் அனைத்தையும் கைவிட்டு புலம்பெயர்ந்து வசதியீனங்கள் அற்ற நிலையில் வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அமைதிச் சூழ்நிலையை அடுத்து அவர்கள் மீண்டும் சொந்த வாழ்விடங்களை நோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பம் வெகுவிரைவில் உருவாகும் என்று எதிர்பார்த்த இவ்வேளையில் அந்த மக்களின் எஞ்சியுள்ள அடையாளங்கள் மிக அண்மையில் இடித்தழிக்கப்பட்டமை மிக மிக வேதனைக்குரியதாகும்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் தங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைளை எதிர்பார்க்கிறோம் என்று வலிகாமம் மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி ஐங்கரன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஊடாகத் தவிசாளர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள நீண்ட கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த காலங்களில் இடம் பெற்று முடிந்த மிகக் கொடூரமான போரால் பாதிப்புக்குள்ளாகி மீண்டும் ஓர் அமைதியான வாழ்வியலை நோக்கி நகர்ந்து செல்ல முற்பட்ட வேளையில் மீண்டும் மறைமுகமான தாக்கங்களை அனுபவிக்க நேர்ந்தமைக்கு மேலாக ஓர் இசைவற்ற சூழல் இயல்பாகத் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் காலத்துக்குக் காலம் ஜனநாயக ரீதியாக முறைப்பாடுகளை மேற்கொண்டோம். அவை சார்பாக இதுவரை சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இந்த இடத்திலே கூடி ஓர் அமைதிப் பிரார்த்தனையை ஏற்பாடு செய்து மீண்டும் தடவை உங்களிடம் எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். இந்த வகையில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் தங்களது உரிய நடவடிக்கையைக் கோருகின்றோம்.
வலி.வடக்கு பிரதேசத்தில் மிக நீண்டகாலத்துக்கு முன்னர் விவசாயமும் கடற்தொழிலும் மிக சிறப்பாகக் காணப்பட்ட நிலையில் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் காலாதிகாலமாக காத்துவந்த எமது சொத்துக்களை விட்டு உயிரைக் காப்பதற்காக மக்கள் புலம்பெயர்ந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் நாட்டின் அமைதிச் சூழலின் பின் மீண்டும் தமது சொந்த வாழ்விடங்களை நோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பம் மிக விரைவில் உருவாகும் என எதிர்பார்த்த வேளை எஞ்சியுள்ள அடையாளங்கள் மிக அண்மையில் இடித்தழிக்கப்பட்டமை மிக வேதனைக்குரியதாகும்.
இந்த விடயம் தொடர்பில் தங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்கின்றோம். மிக நீண்ட போரின் பின்னர் போர் சூழலுக்குள்ளும் பாதுகாக்கப்பட்டு வந்த எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் அம்சங்களில் ஒன்றான எமது வழிபாட்டுத் தலங்கள் பலவகையிலும் மிக அண்மைக் காலத்தில் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றன.
மிக அண்மையில் கூட தம்புள்ள பகுதியில் காளிகோயில் இடிக்கப் பட்டதற்கு மேலாக அந்தக் கோயில் சுற்றாடலில் வாழ்ந்த மக்களும் அவர்களது இருப்பிடங்களை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறான சூழலில் இந்து தமிழ் மக்களின் மனங்களில் ஜனநாயகம் மீதும் இந்த நாட்டின் வாழ்வுரிமை மீதும் கொண்டுள்ள பற்றுறுதி சிதைந்துவிடும் என்றே குறிப்பிடலாம். இந்த விடயம் தொடர்பில் தாங்கள் ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வீர்கள் என பரிபூரணமாக நம்புகின்றோம்.
மிக அண்மைக் காலமாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவர்கள் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டதற்கு மேலாக மனரீதியாகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த காலப் போரால் பாதிப்புக்கு உள்ளாகிய பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் பிறிதொருவரிலோ அல்லது பிறிதொரு சமூகத்திலோ தங்கி வாழாது தாமாகவே வாழக்கூடிய நிலை இது வரை உரிய முறையிலே பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த விடயம் தொடர்பிலும் தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.
கடந்த கால அசாதாரண சூழ்நிலைகளின் போது காணாமற்போனோர் பற்றிய விடயங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த விடயம் தொடர்பில் ஜனநாயக போராட்டங்கள் பல நடத்தியும் கூட இதுவரை தகுந்த, சாதகமான, திருப்தி அளிக்கக்கூடிய தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் இதுவரை தொடர்ந்த வண்ணமே உள்ளன. அண்மைக் காலத்தில் கூட பொது மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுகின்றன என்ற நிலையில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
நவீன ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஊடகத்துறை இவ்வாறாக தாக்கத்துக்கு உட்படுவது ஒட்டுமொத்த இலங்கையை அதன் ஜனநாயகத்தன்மையை ஏற்புடையதாக்காது என்றே கருதுகின்றோம்.
என்று அக்கடிதத்தில் மேலும் கூறிப்பிடப்பட்டுள்ளது.