வலி.வடக்கில் மஹிந்தவின் பணிப்பையும் மீறி நேற்றும் வீடுகள் இடித்தழிப்பு!

tellippalai - army-saraவலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்கவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ­விடுத்த உத்தரவையும் மீறி நேற்று சனிக்கிழமையும் அங்கு வீடுகளை இடித்துத் தரைமட்ட மாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் நேற்று நேரில் சென்று உறுதிப்படுத்தினார். வீடுகள் அழிப்பதை நிறுத்து மாறு எங்களுக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. இது அரசுடமையாக்கப்பட்டுள்ள பகுதி. இங்கு நாங்கள் எது வேண்டுமானாலும் செய்வோம். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். சட்ட நடவடிக்கை எடுப்பதென்றாலும் எடுங்கள் என்று வலி.வடக்கில் வீடழிப்பை மேற்கொண்டு வரும் இராணுவ மேஜர் தன்னிடம் கூறியதாக வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.

வலி.வடக்கில் கடந்த சில தினங்களாக, உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுக்குள் உள்ள வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ­விடம் இரு தினங்களுக்கு முன்னர் தொலை பேசியில் உரையாடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலி.வடக்கு வீடழிப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன் பின்னர் சம்பந்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வலி.வடக்கு வீடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு யாழ். மாவட்ட இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சம்பந்தனிடம் கூறியிருந்தார். எனினும் இந்த உத்தரவையும் மீறி நேற்றும் அங்கு வீடுகள் இடித்தழிக்கப்பட்டன.

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு பின்புறமாக உள்ள வறுத்தலைவிளான் பகுதியில் இராணுவத்தினர் “புல்டோசர்’ கொண்டு வீடுகளை இடித்தழிததை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன்.

இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உள்ள இராணுவ மேஜர் நிசங்க என்பவர், இந்தப் பிரதேசம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. இங்கு நாம் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியும். இங்கு நடைபெற்று வரும் வீடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு எமக்கு எந்த உத்தரவும் வரவில்லை. நீங்கள் உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள். சட்ட நடவடிக்கை எடுப்பதென்றாலும் எடுங்கள் என்று தன்னிடம் கூறினார் என தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

வீடுகள் இடிப்பதை நிறுத்துமாறு ஜனாதிபதி படையினருக்கு உத்தரவு