வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து பெறுமதியான பொருட்களை சூறையாட முயன்ற சந்தேகநபர்களைத் தடுக்க முற்பட்ட தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிறிமோகன் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் 20பேரை நேற்று புதன்கிழமை (15), காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள 590 ஏக்கர் நிலப்பரப்பு காணி, கடந்த 11ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் தமது சொந்த காணிகளை பார்வையிட்டு, அடையாளப்படுத்தி துப்பரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அடையாளப்படுத்தப்படாத காணிகளுக்குள் அத்துமீறி நுழையும் சிலர் அங்குள்ள பயன்தரு மரங்களான வேம்பு, மா, பலா மற்றும் பூவரசு போன்ற மரங்களை அனுமதியின்றி தறிக்கின்றார்கள்.
வீடுகளில் இருக்கும் கதவுகள், யன்னல்கள், யன்னல் நிலைகள் என்பவற்றையும் பிடுங்கி செல்கின்றனர். இரும்பு பொருட்களையும், வீட்டு தூண்கள், நுழைவாயில் தூண்கள் வீட்டிலுள்ள கொங்கிறீட் பிளட்டுகள் என்பவற்றை உடைத்தும் அதனுள் இருக்கும் இரும்புக் கம்பிகளை கொள்ளையிட்டும் செல்கின்றனர்.
இது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிறிமோகன் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோருக்கு பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் அங்கு சென்ற பிரதேச செயலாளர் மீதே அவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் உடனடியாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மாவிட்டபுரம் – சாந்தை சந்தி வரையிலான வீதியில் திடீர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், அவ்வழியாகச் சென்ற வாகனங்களை மறித்து சோதனைகளையும் மேற்கொண்டனர்.
அப்போது பெறுமதியான பொருட்களை சூறையாடியதாகச் சந்தேகப்படும் 20பேரை கைது செய்ததாகவும் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.