இராணுவம் மேற்கொள்ளும் வீடழிப்பு சம்பவத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிகண்டனம்

TNPFவலி வடக்கில் இராணுவம் மேற்கொள்ளும் வீடழிப்பு சம்பவத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அவ்வறிக்கையில்

கடந்த சில நாட்களாக வலிகாமம் வடக்கிலுள்ள சட்டவிரோத உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான வீடுகளை மீண்டும் இராணுவத்தினர் இடித்து அழித்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தது.

இன்றைய தினம் அங்கு நிலைமைகளை பார்வையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் கடுமையாக அச்சுறுத்தபட்டதுடன் அவர்களது புகைப்படக் கருவிகளும் பறித்து அதிலிருந்த புகைப்படங்களையும் அழித்துள்ளனர்.
இத்தகைய செயற்பாடுகள் இலங்கை அரசின் சொந்த சட்ட ஆட்சியையே கேலிக்கூத்தாக்குவதுடன், மனித உரிமை மீறல் செயற்பாடும், ஊடக சுதந்திரத்தினை அடக்க முற்படும் செயற்பாடுமாகும். இவ்விரு சம்பவங்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவ்வாறு நில அபகரிப்பு மற்றும் அழிப்பு நடவடிக்கைகள் மூலம் அங்கு சிங்களக் குடியேற்றங்களையும், இராணுவக் குடியேற்றங்களையும், பௌத்த கோவில்களையும் அமைக்க இலங்கை அரசானது முயற்சிக்கின்றது. இந் நடவடிக்கைகள் ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் பாதிக்கச் செய்வதாக அமைந்துள்ளது.

வலிகாமம் வடக்குப் பகுதிகளிலுள்ள காணிகளை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவித்து அப்பகுதி மக்களை மீண்டும் அங்கு குடியமரவைப்பதற்காக அரச இயந்திரத்தின் ஓர் அங்கமான இலங்கையின் உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் பெருமளவான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்குகள் நிலுவையிலுள்ளபோது அவ் அரச இயந்திரத்தின் மற்றொரு அங்கமான இராணுவத்தினரால் இவ்வாறான சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

நீதிமன்றங்களில் வழக்கு ஒன்று நிலுவையிலுள்ளபோது அவ்வழக்கின் விடயப்பொருளின் தன்மையானது (status quo) பேணிப்பாதுகாக்கப்படல் வேண்டுமென்பது சட்டவிதி. அவ்வாறிருக்க இராணுவத்தினரின் இச் செயற்பாடானது சட்டவாட்சியை நகைப்பிற்கிடமான வகையில் மீறியுள்ளது. இந்நிலையானது தமிழ் மக்கள் நீதி நியாங்களை பெற்றுக்கொள்வதென்பனை தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகியுள்ளதையே வெளிப்படுத்துகின்றது.

மேற்படி பிரச்சினைகளை கையாள்வதற்கு சட்டரீதியாக தீர்வுகாண தமிழ் மக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அந்த சட்டநடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கும் வகையில் சிறீலங்கா அரசு செயற்பட்டுவருகின்றமையானது இப்பிரச்சினையை அரசியல் ரீதியாகவும் அணுகப்பட வேண்டிய தேவை உள்ளமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

இவ்விடயத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்து கட்டமைப்பு சார் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படுவதனைத் தடுக்க காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது. இவ்வாறான கட்டமைப்புசார் இன அழிப்பு பிரச்சினைகளை சர்வதேச சமூகம் வெறும் சட்டக்கோணத்தில் மாத்திரம் நோக்காது இவற்றினை ஓர் அரசியற் பிரச்சினையாக கருதி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். கொழுந்துவிட்டெரியும் இனப் பிரச்சினைக்கு ஓர் நிரந்தரத்தீர்வினை அடைவதனூடாகவே இத்தகைய கட்டமைப்புசார் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கான ஒரே வழி தமிழ்த் தேசத்தின் இருப்பினை அங்கீகரிப்பது மட்டுமேயாகும். எனவே தமிழ்த் தேசத்தின் இருப்பினை அங்கீகரிப்பதன் மூலம் மேற்படி அழிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் காத்திரமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்”

Related Posts