ஒரு மாதத்தில் ஒரு இலட்சத்து 50ஆயிரத்திற்குக் குறைவாகவும், ஒரு நாளைக்கு 33ஆயிரத்தை விடக் குறைவாகவும் வருமானத்தைப் பெறும் சிறு தொழில் முயற்சியாளர்கள் வற் வரியில் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தில் எவரையும் குழம்பத் தேவையில்லையெனவும், வரி கட்டாதவர்களே தேவையற்ற முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு வற் வரி கட்டுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்த்துள்ளோம். இதன்படி ஒரு நாளைக்கு 33இற்கும் குறைவான இலாபத்தினையும் ஒரு மாதத்திற்கு ஒரு இலட்சத்து 50ஆயிரத்திற்குக் குறைவாக இலாபம் பெறும் சிறு தொழில் முயற்சியாளர்களிடமிருந்து வற் வரி அறவிடப்படமாட்டாது.
சிறு தொழில் முயற்சியாளர்களின் குறித்த வருமானத்திற்கு உட்பட்டவர்களும் வற் வரி பதிவாளர்களினால் பதிவு செய்யப்பட்டவர்களாகும். ஆகவே இவர்களிடம் பதிவாளர்கள் வரி கோரும் போது அதற்கான பணத்தை அரசாங்கம் தாங்கிக்கொள்ளும்.
எனவே, இது தொடர்பில் சிறு தொழில் முயற்சியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தேன். அவர்கள் அதற்கு ஒப்புதலளித்தார்கள். இதற்கு மேலும் எதிர்ப்புகளை வெளியிட்டவர்கள் வற் வரி செலுத்தாதவர்கள். எனவே மக்கள் இதுபற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.