வர்ணம் பூசியதற்கு பணம் கேட்கும் இராணுவத்தினர்

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு வர்ணம் பூசிய இராணுவத்தினர் வர்த்தகர்களிடம் அதற்கான பணத்தை வசூலிப்பதாக வர்தகர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்குக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வடமராட்சிப் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

அதையொட்டி நெல்லியடி நகரப்பகுதியை அண்மித்த பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களுக்கு முன் பகுதிகளுக்கு மட்டும் இராணுவத்தினரால் நீல வர்ணம் தீட்டும் நடவடிக்கைகள் இரவிரவாக இடம்பெற்றன.

இதற்கென ஒவ்வொரு வியாபார நிலையங்களினதும் உரிமையாளர்களிடமிருந்து தலா ஆயிரம் ரூபா அறவிடப்படுகின்றது. சில வர்த்தகர்கள் குறித்த பணத்தை வழங்கிய போதும் சிலர் மறுப்புத் தெரிவித்து விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து நெல்லியடிப் பொலிஸாரின் தலையீட்டை அடுத்து பணம் அறவிடும் முயற்சி கைவிடப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.