வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உருளைக்கிழங்கு

யாழ்.மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 5 கிலோ உருளைக்கிழங்குகள் வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று புதன்கிழமை (17) தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

யாழ்.மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுடன் சேர்ந்து, உருளைக்கிழங்குகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்காக நுவரெலியாவில் இருந்து 150 மெற்றிக்தொன் உருளைக்கிழங்குகள் எடுத்துவரப்படுவதற்காக யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் 7 பாரவூர்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கையிலேயே இந்த உருளைக்கிழங்குகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை, அந்தந்த பிரதேச செயலகங்களினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.