வன்முறையில் ஈடுபட்டனர் என்று குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 129 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தினர் மற்றும் நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றின் மீதும், வாகனங்கள் மீதும் கற்களை வீசினர் என்ற குற்றச்சாட்டில் நேற்று புதன்கிழமை 129 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் மூன்று கட்டங்களாக முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிவான் முதற்கட்டமாக முற்படுத்தப்பட்ட 43 பேரை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்டமாக முற்படுத்தப்பட்ட 39 பேரை 4ஆம் திகதி வரையும், மூன்றாம் கட்டமாக முற்படுத்தப்பட்ட 47 பேரை முதலாம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.