Ad Widget

வன்னியில் படை முகாம்கள் அகற்றப்பட்டால் மனிதப் புதைகுழிகள் வெளிவரும்: வீரவன்ச எச்சரிக்கை

வன்னியிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டால் அங்குள்ள மனிதப் புதைகுழிகள் வெளிவரும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்தரான நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அச்சம் வெளியிட்டுள்ளார்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் சிறிலங்கா இராணுவம் மீது போர் குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்த நிலைமையைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்றய தினம் மல்வது பீட மகாநாயக்கத் தேரர் திப்படுவாவே சிறி சுமங்கல தேரரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைவர்களான மல்வது மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை நேற்று சந்தித்த போதே விமல் வீரவன்ச இந்த விடையங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலமைகள் தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய விமல் வீரவன்ச, “ஜெனீவாவில் வைத்து இந்த அரசாங்கம் போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக சர்வதேச நீதிபதிகள் வெளிநாட்டு வசழக்குத் தொடுநர்கள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

ஆனால் ஜனாதிபதி வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதில்லை என்று அறிவித்துள்ளார். இதற்கமைய ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய இடம்பெறுமா அல்லது சர்வதேச சமூகத்தின்விருப்பத்திற்கு அமைய இடம்பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் பனிகளை பார்க்கும் போது எதிர்காலத்தில் போர் குற்ற நீதிமன்றத்தை அங்கீகரிக்கும் வகையிலேயே அதனைத் தயாரித்து வருகின்றது.

ஏனெனில் தற்போதைய அரசியல் சாசனத்தில் போர் குற்ற நீதிமன்றத்தை உள்நாட்டில் அமைப்பதற்க அனுமதி இல்லை. குற்றவியல் சட்டமே நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் உள்ளது. இதற்கமைய போர் குற்ற நீதிமன்றை உருவாக்க முடியாது. அதனால் எம்மிடம் இல்லா போர் குற்ற நீதிமன்றை அங்கிகரிக்கக்கூடிய வகையில் அரசியல் சாசனத்தை மாற்ற இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

குறிப்பாக நாம் உங்களுக்கு பொய்யை கூறி உங்களை குழப்பிவிடும் உத்தேசம் எமக்கில்லை. நாம் ஒருபோதும் அதனை செய்யவும் இல்லை. அரசியல் ரீதியாக எமக்கிடையில் கருத்துவேறுபாடுகள் காணப்பட்டாலும் நாம் ஒருபோதும் உங்களிடத்தில் பொய்யான தகவல்களை கூறுவதில்லை. நாடு பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாலேயே உங்களிடத்தில் வந்து நாம் முறையிடுகின்றோம்.

அண்மையில் கிளிநொச்சி பிரதேசத்தில் முன்னர் விடுதலைப் புலிகளின் மாவீரர் கிராமங்கள் அமைந்திருந்த கிராமங்களுக்கு மத்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமை இந்த அரசாங்கம் அகற்றியுள்ளது.

அந்த பகுதியில் தான் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் புதைக்கப்பட்டனர். அந்த இடம் தோண்டப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. அவ்வாறு தோண்டினால் அங்கு ஆயிரக்கணக்கான உடலங்கள் கண்டுபிடிக்கப்படும்.

அவை விடுதலைப் புலிகளா இல்லையா என்பதை கண்டுபிடிக்கப்பட முடியாது என்பதால் அவற்றை அடிப்படையாக வைத்து எமது இராணுவத்தினருக்கு எதிராக போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குத் தொடரலாம்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் கோசோவோ சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்றது போல் சிறிலங்காவிலிருந்தும் வடக்கு கிழக்குப் மாகாணங்கள் தனிநாடாக பிரிந்துசென்றுவிடக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது என்று வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts