வட மாகாண முதலமைச்சர் – யாழ். முஸ்லிம்கள் சந்திப்பு

யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சனிக்கிழமை சந்தித்துள்ளார்.

DSC_0064(3)

யாழ் நாவந்துறை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிரசா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வட மாகாண சபை உறுப்பினராக முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு இந்த சந்திப்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்ததுடன் வட மாகாண சபையினால் முஸ்லிம் மக்களிற்காக முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டங்களையும் தமது பிரதிநிதியூடாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நான் அரசியலுக்கு வர முன்னர் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று எதிர்பார்த்ததாகவும் தற்போது முதலமைச்சராகியுள்ள நிலையில் இந்த வேலைத்திட்டத்தை நான் செவ்வனே முன்னெடுப்பேன் என உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன் யுத்த காலத்தில் முஸ்லிம்களின் பெருமளவான வீடுகள் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. இதற்கான நஷ்டஈட்டை பெறுவதற்குரிய தீர்மானமொன்றை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும் என முஸ்லீம் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினரான ஐயூப் அஸ்மின் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.