வட மாகாண சபையில் 11 பிரேரணைகள் நிறைவேற்றம்

northவட மாகாண சபை நேற்றய அமர்வுகளில் 12 பிரேரணைகள் 7 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டு அதில் 11 பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. வடமாகாண சபையின் 2014 ஆம் வருடத்திற்கான முதலாவது அமர்வு நேற்று கைடியிலுள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது, வடமாகாண சபையின் 7 உறுப்பினர்களினால் 12 பிரேரணைகள் சபையில் முன்வைக்கப்பட்டன. இதில் 11 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.

இருந்தும், ஏ – 9 வீதியிலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தில் பேரூந்துகள் 2008 இற்கு முன்னைய காலப்பகுதிகளில் நின்று சென்றதுடன், தற்போது அங்கு நின்று செல்வதில்லையெனவும், இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதினால் அங்கு நேரக்கணிப்பாளர் அலுவலகம் ஒன்றை அமைத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாமென வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன் முன்வைத்த பிரேரணையினை, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பேரூந்தின் சாரதிகளிடம் இதற்கான பிரச்சினையினை தீர்க்கும்படி விட்டுவிடுவோம். அவர்கள் விரும்பினால் அதனைச் செய்யலாம் எனத் தெரிவித்ததிற்கமைய அந்தப் பிரேரணை சபையில் நிராகரிக்கப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் பின்வருமாறு:

 

 1. முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மக்களுடைய வாழ்வாதாரத்திற்குரிய நிலத்தினை விவசாயம் செய்வதற்கு ஏற்ற வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
 2.  தண்ணி முறிப்பு, கொக்குத் தொடுவாய் பகுதிகளின் விவசாயத்துக்குரிய வீதிகளைப் புனரமைப்புச் செய்தல்.
 3. ஒப்பந்த அடிப்படையில் வடமாகாண அரச திணைக்களங்களில் கடமையாற்றும் சாரதிகளின் சேவையை முடிவுறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையை இடைநிறுத்துவதும் அவர்களின் நிரந்தர நியமனத்தை உறுதி செய்து கொள்ளுதலும்.
 4. முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழுள்ள ஒட்டுசுட்டான் பிரதேச சபையைத் தனியாகப் பிரித்தல்.
 5. வடமாகாணத்தில் பெற்றுக்கொள்ளப்படும் பனை, தென்னை ஆகியவற்றின் உற்பத்திப் பொருட்களை ஏற்றவாறு சந்தைப்படுத்துவதற்குரிய அதிகார சபையொன்றை நிறுவுதல்.
 6. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், அருட்திரு தனிநாயகம் அடிகளார் ஆகியோருக்கு யாழ்.மாநரக சபை எல்லைக்குள் சிலைகள் அமைத்தல்.
 7. இலங்கையின் அனைத்து சிறைகளிலுமுள்ள புனர்வாழ்வு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசிற் கைதிகள் அனைவரும் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை இனப்பிரச்சினைத் தீர்வில் காட்டும் முகமாக பொதுமன்னிப்பு ஒன்றை வழங்க வேண்டும் என ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தல்.
 8. வட மாகாண சபையின் அரச சேவையிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை நியாயமான முறையில் தீர்த்து வைத்தல்.
 9. யுத்தத்தில் அவயங்களை இழந்து தற்போது தொழில் வாய்ப்பின்றி இருக்கும் விசேட தேவையுடையோருக்கு அவர்கள் கல்வித் தகைமைக்கேற்ப மாகாண நிர்வாகத்தில் உள்ள அரச வெற்றிடங்களுக்கு இணைப்பதன் மூலம் அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணல்.
 10. முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வு அலகுகளை ஏற்படுத்தல்.(முல்லைத்தீவினை கிளிநொச்சி கணக்காய்வு அலகும், மன்னாரினை வவுனியா கணக்காய்வு அலகும் தற்போது கவனித்து வருகின்றன)
 11. வடமாகாண முதலமைச்சரின் படங்களை வடமாகாணக் காரியாலயங்கள் அனைத்திலும் காட்சிப்படுத்திக் கௌரவித்தல் உள்ளிட்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன.