Ad Widget

வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் உயிரிழப்பு

வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் மாரடைப்பால் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

68 வயதான அன்ரனி ஜெகநாதன், மோட்டார் சைக்கிளில் பயணம்செய்துகொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சைகளை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினரான அன்ரி ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்துவந்த முக்கிய அரசியல் வாதிகளில் ஒருவராவார்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அக்கறை செலுத்துவதில்லை என பகிரங்கமாக கவலை வெளியிட்டு வந்த அவர், இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட கூட்டமைப்பின் தலைவர்களுடன் பல தடவைகள் கடும் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனால் தன்னை அரசியலிலிருந்து ஓரம்கட்ட கூட்டமைப்பிலுள்ள சிலர் முயன்று வருவதாகவும் வருத்தம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts