வட மாகாணத்தில் சுற்றுலாதுறையை மேம்படுத்தும் நோக்கில் விசேட நடவடிக்கை

வட மாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாதுறை ஒன்றியத்தின் தலைவர் வை.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.வடமாகாணத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது தொடர்பில் சனிக்கிழமை யாழ். வர்த்தக சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் குறிப்பட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள மாகாணங்களில் வடக்கு மாகாணம் சுற்றுலா துறையில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இது இந்த நாட்டில் நடைபெற்ற 30 வருட யுத்தத்தால் ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகின்றது.

இந்தப் பின்னடைவைப் போக்குவதற்கு வடக்கில் பல கவர்ச்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலா மையங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலா மையம் தொடர்பாக ஒரு பாடசாலை ஒன்றையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடமாகாண சுற்றுலா துறையில் முதலீடு செய்யவிரும்புபவர்கள் வட மாகாண சுற்றுலாதுறை ஒன்றியத்தினூடாக தொடர்புகளை மேற்கொண்டால் அதற்கான உதவிகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வடபகுதி சுற்றுலாத்துறையினை விருத்திசெய்ய சிவில் விமான நிலையம் தேவை

வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையை விருத்திசெய்ய மிதிவெடிகள் மற்றும் ஓமந்தையில் இடம்பெறும் சோதனைகளும் தடையாக இருப்பதாக வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவர் தி.சுந்தரேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தினால் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை சுட்டிக் காட்டினார்.

வெளிநாட்டில் இருந்து வருகின்ற சுற்றுலா பயணிகள் வடபகுதிக்குள் வரும்போது ஓமந்தை இராணுவ முகாமில் சோதனையிடுவதனாலும், வீதிகளில் மிதிவெடிகள் கவனம் என்ற பதாதைகளையும் பார்த்தவுடன், சுற்றுலா பயணிகள் வடபகுதிக்கு வருவதற்கு அச்சம் கொள்வதால் சுற்றுலா துறை பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகள் சுற்றுலாத்துறைக்கு உகந்ததல்ல என்றும், சுற்றுலா பயணிகள் பயணத்தில் நேரத்தினை செலவிட விரும்புவதில்லை என்றும் அதனால், பலாலி விமான நிலையத்தினை சிவில் விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றதாகவும், பலாலி விமான நிலையம் சுற்றுலா பயணிகளை நிறுத்தக்கூடிய சுற்றுப்புறமாக அமையவில்லை என்றும் அந்த சுற்றுப்புறங்கள் மாறவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கு சரியான நோக்கினையுடைய அமைப்பு இல்லை என்றும், அவ்வாறான அமைப்புக்கள் இருந்தால் சுற்றுலா துறையினை விருத்தி செய்ய முடியுமென்றும், வடபகுதியில் துரித கதியில் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்யவேண்டுமென்றும் அவர் கூறினார்.

இதேவேளை வடமாகாணத்தில் ஏற்பட்ட 30 வருட யுத்தத்தின் பின்பு தற்போது சுற்றுலா மற்றும் ஏனைய துறைகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. அந்த வகையில், சுற்றுலா துறையினை விருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

வடமாகாணத்தில் 30 வருடமாக சுற்றுலாத்துறை இல்லாத போதிலும், யுத்தத்திற்கு பின்னரான 3 வருடத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வருகின்றது. அதனடிப்படையில் அனைத்து இடங்களையும் சுற்றுலா தளமாக மாற்றியமைப்பதற்கு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு அவசியமென்றும் அவர் கூறினார்.

அதேவேளை, சுற்றுலா தளங்களை அமைப்பதற்கு அனுமதிகள் பெறுவதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவிடப்படுமென்று முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டிய தேவையில்லை என்றும் அனுமதிகளை வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியம் இலகுவான முறையில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து தருவதாகவும், வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி வீததினை அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.