சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் வகையில், வடமாகாணத்தில் கலப்புப் பாடசாலைகளை உருவாக்கவேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
அவர், ஒன்றிணைந்த கட்டளைத் தலைமையகத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் விஸ்வமடு பயிற்சி முகாமை, நேற்றுத் திங்கட்கிழமை பார்வையிட்டார்.
அதன் பின்னர், அங்கு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட யாருமே இனவாதிகள் அல்லர். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோளோடு தோள்கொடுத்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வதற்கு வழிசமைக்கவேண்டும்.
கலப்பு என்பது பாழடைவது போன்றதொரு வேலையில்லை. கலப்பதன் ஊடாகவே நல்ல பல விடயங்கள் உருவாகின்றன. சிங்கள-தமிழ் திருமணத்தின் ஊடாகவும் இதுவே இடம்பெறுகின்றது.
உலகிலேயே மிகச்சிறந்த நாடாக மாற்றுவதற்கு, நாங்கள் வேலைசெய்யவேண்டும்.
இராணுவத்தின் உதவியுடன் முன்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அது மிகவும் நல்லவிடயமாகும். கல்வியில் மதம், இனம் இருக்கக்கூடாது. ஆகையால், வடமாகாணத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவ மாணவிகள் கல்விப் பயிலும் வகையில் கலப்புப் பாடசாலைகளை உருவாக்கவேண்டும் என்றார்.
வடமாகாண ஆளுநர் அங்கு விஜயம் செய்திருந்த போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 3,500 பேர் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தனர். இதற்கு முன்னர் இங்கிருந்து 3,000 பேர், புனர்வாழ்வு பெற்றுச் சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.