வட மாகாணசபை அமர்வில் கமலேந்திரன் பொலிஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டுள்ளார்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனை மாகாணசபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு நீதிமன்றம் கடந்த 23 ம் திகதி அனுமதி வழங்கியது.

Kamal

அத்துடன் குறித்த சந்தேகநபரை சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் போது தாம் பாதுகாப்பு வழங்குவதாகவும் அதற்கு ஆட்சேபம் இல்லை என்றும் சிறைச்சாலை அத்தியட்சகர் மன்றிற்கு அறிவித்திருந்தார். மேலும் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் போது பூரண பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு மன்று உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும் மன்று அனுமதிவழங்கியிருந்த போதும் சபை அமர்வுகளில் கமல் கலந்துகொண்டு வழக்கு விடயங்கள் தொடர்பில் எதுவும் சபையில் பேசக்கூடாது என்றும் ஏனைய உறுப்பினர்களுடனும் இது குறித்து விவாதிக்க முடியாது என்றும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் சபை அமர்வு ஆரம்பிக்கும் போது உட்செல்வதுடன் முடிந்தவுடன் வெளியேற வேண்டும் என்றும் எதிர்வரும் சபை அமர்வில் கமலின் நடவடிக்கைகளை வைத்தே சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

தொடர்ந்தும் நீதிமன்றின் உத்தரவுகளை மீறும் பட்சத்தில் அதற்கான கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் மேல் நீதிமன்றினால் பிணை வழங்கும் சாத்தியக் கூறுகள் இருந்தாலும் அவையும் நிராகரிக்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி நிபந்தனைகளுடன் இன்றைய வடக்கு மாகாணசபை அமர்வில் கமலேந்திரன் பொலிஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டுள்ளார்.

Related Posts