வடக்கு மாகாணசபையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒன்றிணைந்து எதிர்க்கட்சி போல செயற்படுகின்றனர். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசுவதுடன், சபை நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள் என வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.
மாகாண சபையின் எதிர்க்கட்சியாகவுள்ள நாங்களே சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறோம். ஆனால், ஆளும் கட்சிக்குள் இருந்து கொண்டே சிலர் எல்லாவற்றையும் எதிர்த்து வருகிறார்கள்.
ஒரு கட்சிக்குள் அல்லது ஆளுந்தரப்பிற்குள் உள்ள கூட்டுக் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் இருப்பது யதார்த்தம். ஆனால், அந்த முரண்பாடுகளை சபையில் வைத்துப் பேசுவது முறையில்லை. கட்சிக் கூட்டங்களில் வைத்தே அல்லது சபைக்கு வெளியே வைத்தோ அதனைப் பேசித்தீர்க்க முடியும்.
ஆனால், கட்சிக் கூட்டங்களில் பேச வேண்டிய எல்லாவற்றையும் மாகாண சபையில் பேசுகிறார்கள். இதனால் மாகாண சபை அமர்வுகள் கட்சிக் கூட்டங்கள் போன்றே நடக்கின்றன. ஆக்கபூர்வமாகச் செயற்படாமல் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசவே மாகாண சபை அமர்வைப் பயன்படுத்துகிறார்கள்- என்றார்.