வடபகுதி இளம் சமூகத்தின் மத்தியில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் சில விஷக் கிருமிகள் ஊடுருவியுள்ளன. எனவே, எமது சமூகம் விழிப்பாக இருந்து மண்ணின் மகிமையை பாதுகாக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
எமது கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே தமிழ் சமூகம் தலை நிமிர்ந்து வாழ முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக சண். குகவரதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் முடிந்து அந்த வடுக்கள் ஆறாத நிலையில், இன்று வடக்கில் சிறு பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் என குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாது, இளைஞர்கள் மத்தியில் மதுப்பழக்கம், சிகரட் பாவனையென தீய பழக்கங்களும் அதிகரித்துச் செல்கிறது. யாழ்ப்பாண சமூகம் கலாசார விழுமியங்களை பாதுகாத்து ஒழுக்கமுள்ள கல்வி அறிவுடன் உயர் பதவிகளை வகித்த
சமூகமாகும்.
எலிசபெத் மகாராணியால் சேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களான சேர்.பொன் வைத்தியலிங்கம் துரைசாமி, சேர். பொன் அருணாசலம், சேர். பொன் இராமநாதன் ஆகியோர் வாழ்ந்த புகழ்பூத்த சமூகம் யாழ் தமிழ் சமூகமாகும்.
இடையில் யுத்தம் காரணமாக எமது மக்கள் பாதிக்கப்பட்டாலும் குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் பரீட்சைகளில் எமது பிள்ளைகள் திறமையாக சித்தியெய்தினர்.
ஆனால், யுத்தம் முடிந்த அந்த வடுக்கள் ஆறாத முன்பு வடக்கில் இளம் சமூகத்தில் கலாசார சீரழிவுகள் தலைதூக்கியுள்ளன. இதற்கு சில தீய சக்திகள் துணை போகின்றன. ஒத்தாசை வழங்குகின்றது. எனவே இவ்வாறான நச்சுக் ‘களைகளை’ பிடுங்கி எறிய வேண்டும்.
வளர்ந்து வரும் தமிழ் இளைஞர்களும், பெண்களும் எமது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்க முன் வரவேண்டும். கலாச்சார சீரழிவுகளுக்கு துணை போய் எமது மண்ணின் மகிமையை அபகீர்த்திக்குள்ளாக்கலாகாது.
‘இளைஞர்களை கனவு காணுங்கள்’ என்று கௌரவ டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
எமது கனவு விடிவை நோக்கி இருக்க வேண்டியதே தவிர விடியாத இரவுகளை நோக்கி நகரக்கூடாது என்று சுவாமி விவேகானந்தர் கூறிய போதனைகளை நாம் எப்பொழுதும் பின்பற்ற வேண்டும் என்றும் தனது அறிக்கையில் சண். குகவரதன்
தெரிவித்துள்ளார்.