வட்டுவாகலில் காணி அபகரிப்பை தடுக்க ஒன்றுகூடுமாறு சிவாஜிலிங்கம் அழைப்பு!

வட்டுவாகலில் காணி அபகரிப்பைத் தடுக்க ஒன்றுகூடுமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசு காலத்திலும் காணி சுவீகரிப்பு இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக வட்டுவாகலில் 617 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. வடக்கு, கிழக்கிற்கு வெளியிலும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறிடங்கள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக உள்ள பழைய கச்சேரி கட்டடத்தை விற்பனை செய்யும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை ஆகிய இடங்களை புத்த விகாரை இருந்ததாக கூறி அதனை சூழ பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த அபகரிப்புகள் வடக்கு, கிழக்கை திட்டமிட்டு துண்டிக்கும் நடவடிக்கைகளே.

தமிழர் ஒரு தேசிய இனம். இந்த நில அபகரிப்பை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணியில் நளையதினம் நில அளவை மேற்கொண்டு அதனை அபகரிப்பதற்காக காணி உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளை சீனாவிற்கு விற்பதற்கான நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன.

காணிச் சுவீகரிப்பை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு முன்வர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor