தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திலிருந்து தாம் நகர்ந்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவரருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இரா.சம்பந்தன் இந்தியாவின் முன்னணி பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள்உட்பட பெரும்பாலான தமிழ் கட்சிகள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இணக்கப்பட்டிற்கு வந்துள்ளதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். தற்போது இலங்கையில் புதிய அரசியல் சாசனமொன்றை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன் இதில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழ் மக்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.