வடமாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழாவில் நிதர்சனின் குடும்பத்துக்கு நிதியுதவி

கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை (18.01.2014) நடைபெற்ற உழவர் பெருவிழாவின்போது கிளிநொச்சி திருநகர் தெற்கைச் சேர்ந்த வீரலிங்கம் நிதர்சனின் குடும்பத்துக்கு சுயதொழில் முயற்சியாகக் கோழிவளர்ப்பை மேற்கொள்ளவென ஒரு இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

IMG_1726 2

சுப்பிரமணியம் வீரலிங்கம் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குடும்பத் தலைவரான இவர் சிறைக்குள் முடங்கிப்போயிருப்பதால் குடும்பச் சுமையைச் சுமப்பதற்காக இவரது மகனான 15 வயதுடைய நிதர்சன் தனது கல்வியை இடைநிறுத்தித் தச்சுத் தொழிலில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த நான்காம் திகதி சுகவீனம் காரணமாக நிதர்சன் உயிரிழந்தார். இதனால் அவரது தாயாரும் மூன்று சகோதரிகளும் நிர்க்கதியாகியுள்ள நிலையிலேயே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

காரைநகர் வியாவில் ஐயனார்கோவில் வழங்கிய இந்த நிதியை வடமாகாண முதல்வர் க.வி. விக்கினேஸ்வரன் நிதர்சனின் சகோதரி நிதுர்ஷியா வீரலிங்கத்திடம் கையளித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரபல வர்த்தகரும் சமூகசேவையாளருமான ஈ.எஸ்.பி.நாகரட்ணம் மேற்படி ஆலய அறங்காவலர் க.சோமசேகரம் மற்றும் வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், வலது கையால் செய்யும் உதவி இடது கைக்குத் தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் இந்த அரங்கில் எல்லோர் முன்னிலையிலும் இந்த நிதி கையளிக்கப்படுகிறது. இது யாருக்கும் மலிவான விளம்பரங்களைத் தேடுவதற்காக அல்ல.இந்தப்போராட்டத்தில் இறந்த ஒவ்வொரு போராளியும் தங்கள் இறுதிக்கணத்தில், தங்கள் குடும்பத்தை யாராவது தாங்குவார்கள் என்றுதான் எண்ணியிருப்பார்கள். சிறைகளில் வாடுவோரும் அவ்வாறுதான் எண்ணிக்கொண்டிருப்பார்கள். ஆனால், அரசின் கெடுபிடி காரணமாகப் போராட்டத்துடன் தொடர்புபட்டிருந்தவர்களுடனும் அவர்களது உறவுகளுடனும் வெளிப்படையாகத் தொடர்புகொள்வதற்கு, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு மற்றவர்கள் தயங்கும் ஒரு சூழ்நிலையே இன்றும் நிலவுகிறது இந்த நிலை மாற்றப்படவேண்டும். எங்கள் உறவுகளை நாங்கள் தாங்குவோம், அது எங்கள் கடமை என்று அரசுக்கு வெளிப்படையாக உரத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவும் இந்த உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றவர்களையும் உதவி வழங்குவதற்கு உந்தச் செய்யும் என்பதற்காகவுமே இந்த அரங்கில் வைத்து வழங்கப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி

கிளிநொச்சியில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய உழவர் பெருவிழா