வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகளுக்கு, இனவாதசாயம் பூசாது, அவற்றை அரசாங்கம் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்தார்.
அரசியல் ரீதியாக ஒரு தீர்வைக் காணமுடியாத நிலையே, நாட்டில் தற்பொழுது காணப்படுகிறது. நிலைத்திருக்கக் கூடிய பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பதாயின், முதலில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை முன்வைப்பது அவசியம் என்றார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நுண்நிதியளித்தல் சட்டமூல இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
‘நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று, 16 மாதங்கள் கடந்துள்ளன. ஒரு சில இடங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டதைத் தவிர, மக்களுக்கு இருக்கும் எந்தவிதமான அடிப்படைப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகள் யாவும், அதன்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்வதாகவே இருக்கின்றன’ என்றும் அவர் மேலும் கூறினார்.
‘குறிப்பாக, புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், மீண்டும் கைது செய்யப்படுகின்றனர். புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட பின்னர், நான்கு தடவைகள் கைதுசெய்யப்பட்டவர்களும் உண்டு. இதனால் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட எமது மக்கள், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள போதும், காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அரசாங்கத்தால் எதுவும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. இது மாத்திரமன்றி, காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றிலும் மந்த கதியே காணப்படுகிறது. இவற்றால் மக்கள், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பமுடியாது இருக்கின்றனர்’ என்றார்.